திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் அமைச்சர் சீனிவாசன் தகவல்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.;

Update: 2018-10-27 23:00 GMT
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலை பாலகிருஷ்ணாபுரத்தில், ரூ.65 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், பாலம் கட்டுவதற்கு இடம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும், முதல் ரெயில்வே கேட் அடியில் சுரங்க பாதை பணிகளும் பாதியில் நின்றதால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாலகிருஷ்ணாபுரத்துக்கு வந்து கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். மேலும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டு அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம்கூறியதாவது:-

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும். பாலம் கட்டுவதற்கு நிலம் வழங்கிய 75 பேருக்கு இழப்பீடாக ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சில நாட்களுக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு ரெயில்வே நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அனுமந்தன்நகரில் ரூ.21 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், ஜிக்கா (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணைய நிதி) திட்டத்தின் கீழ் அண்ணாநகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளான மங்களாபுரம், பெரியார்நகர் மற்றும் குழாய் பதிக்கப்படாத பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், கலெக்டர் டி.ஜி.வினய், ஆர்.டி.ஓ. ஜீவா, நெடுஞ்சாலைத்துறைத்துறை கோட்டப்பொறியாளர் கேந்திராதேவி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரபுராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வினியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, நேற்று காலை ஆர்.எம். காலனியில் நடந்த நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் எந்த பாதிப்பும் இல்லை. காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைகளில் தனிவார்டுகள் ஒதுக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 28 விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொசுக்களை கட்டுப்படுத்த புகை அடிக்கும் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்