வைகை அணையில் மேலும் 4 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்க்க முடிவு
வைகை அணையில், மேலும் 4 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. வைகை அணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல்கள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். மீன் வளத்தை பெருக்கும் வகையில், வைகை அணையில் ஆண்டுதோறும் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படுகின்றன.
கட்லா, மிருகால், ரோகு போன்ற ரகங்களை சேர்ந்த மீன் குஞ்சுகள் வைகை அணையில் விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டில் மீன் வளத்துறை சார்பில் 8 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வைகை அணையில் 12 லட்சம் மீன் குஞ்சுகளை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தொட்டிகளில் 12 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் 8 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டன. மீதமுள்ள 4 லட்சம் மீன் குஞ்சுகளை, வைகை அணை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள 30 தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த மீன் குஞ்சுகளை, விரைவில் வைகை அணையில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மீன் குஞ்சுகளை பிடித்து விடாத அளவுக்கு, சிறிய கண் கொண்ட வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் அதிகளவு மீன் குஞ்சுகள் வைகை அணையில் வளர்க்கப்படுவதால், வருங்காலத்தில் மீன்கள் வரத்து கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.