மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

தேனி மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2018-10-27 22:45 GMT
ஆண்டிப்பட்டி ஒன்றியம் கொத்தப்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்வதால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இங்குள்ள குளத்தில் மழை தண்ணீருடன் கழிவுநீரும் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கொத்தப்பட்டி கிராமத்தில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மருத்துவ முகாம்கள் நடத்த கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று ஆண்டிப்பட்டி ஒன்றியம் தெப்பம்பட்டியில் நடந்த முகாமுக்கு தேனி மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி தலைமை தாங்கினார். உதவி திட்ட இயக்குனர்கள் தண்டபாணி, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமையில் மருத்துவர்கள் மாரீஸ்வரன், சண்முகபிரியா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஆலோசனை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் இணைந்து தெப்பம்பட்டி கிராமத்தில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். வீடுகளில் தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் தென்னை மட்டை உள்ளிட்ட கழிவுப் பொருட்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க மருந்து தெளித்தும் ஆலோசனை வழங்கி அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் தாசில்தார் அர்ஜூனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எபி, முத்துப்பாண்டி உள்பட செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். மேலும் ராஜதானி கள்ளர் மேல்நிலைப்பள்ளி, தெப்பம்பட்டி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதேபோல் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வீடுகள், பொது இடங்களில் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். டயர், தேங்காய் சிரட்டை, தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது.

தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் ‘அபேட்‘ மருந்து தெளிக்கப்படுகிறது. தெருக்களில் புகை மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடுகளில் ‘கொசு இல்லாத வீடு‘ என்ற ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். இதேபோல் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், வாரத்துக்கு ஒரு முறை என 52 வாரங்களுக்கு ஆய்வு செய்வதற்கான அட்டவணையையும் நகராட்சி ஊழியர்கள் வீடுகளில் ஒட்டி வருகிறார்கள்.

இந்த பணியை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. வைத்தியநாதன், தாசில்தார் உதயராணி, நகராட்சி ஆணையர் சத்தியநாதன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கடமலைக்குண்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் சுகாதாரத் துறை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திட்ட இயக்குனர் திலகவதி பேரணியை தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், கடமலை மயிலை ஒன்றிய ஆணையர் திருப்பதிவாசகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், கடமலைக்குண்டு ஊராட்சி செயலர் துரைப்பாண்டி உள்ளிட்ட ஏராளமான ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. ஊர்வலத்தை தொடர்ந்து கடமலைக்குண்டு கிராமத்தில் தெருக்குழாய்களில் வினியோகம் செய்யப்படுகிற தண்ணீரின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சின்னமனூர் வட்டார தலைமையாசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம், சின்னமனூரில் நடந்தது. கூட்டத்துக்க தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, தேனி மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ், பள்ளி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைமையாசிரியர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும் டெங்கு, பன்றி காய்ச்சல், சுற்றுச்சூழல் மன்றம், பேரிடர் சார்ந்த விழிப்புணர்வு பற்றி பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்