ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: 2 மாநகராட்சி என்ஜினீயர்கள் கைது
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டல் உரிமையாளர் புகார்
மும்பை மாநகராட்சி ‘என்' வார்டு பகுதி என்ஜினீயர்களாக இருப்பவர்கள் சஜித் ஹமீத் கான் (வயது38), தயானந்த் (28). இந்தநிலையில், விதிமுறை மீறி ஓட்டல் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதன் உரிமையாளர் ஒருவரிடம், மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேரும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த யோசனையின்படி ஓட்டல் உரிமையாளர், மாநகராட்சி என்ஜினீயர்களை சந்தித்து ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடு மற்றும் என்ஜினீயர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.