காட்டுமன்னார்கோவில் அருகே: தொழிலாளி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தொழிலாளி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே குஞ்சமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. இதற்கு காட்டுமன்னார்கோவில் ஊராட்சி இளநிலை உதவியாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். இதில் கருப்பேரி மற்றும் குஞ்சமேடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கருப்பேரியை சேர்ந்த ராஜாராமன் மகன் பாலகிருஷ்ணன்(வயது 30) என்பவர் தனது மனைவி உஷா மற்றும் 2 மகன்களுடன் 11 மணி அளவில் வந்தார். அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து, அதை தனது உடலில் ஊற்றினார். பின்னர் மனைவி மற்றும் மகன்கள் மீதும் ஊற்றி, குடும்பத்துடன் அவர் தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
2017-18-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எனது தந்தைக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடு கட்டுவதற்கான பணி நடைபெற்று முதல் தவணை தொகை வழங்கப்பட்டதாகவும் தகவல் வந்தது. உடனே நான், இதன் உண்மை நிலை பற்றி அறிய தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன். அதில், எனது தந்தை பெயரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் எனது தந்தைக்கு வீடு ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை. வீடு கட்டுமான பணியும் நடக்கவில்லை. மாறாக எனது தந்தையின் பெயரில் குஞ்சமேட்டை சேர்ந்த ஒருவர், வீடு கட்டி வருகிறார். இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நான், கூலித்தொழிலாளி. குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். வரும் காலங்களில் அரசின் உதவியுடன் வீடு கட்ட திட்டம் உள்ளது. தற்போது எனது தந்தையின் பெயரில் ஒருவர் வீடு கட்டி வருவதால், வரும் காலத்தில் எனது பெயருக்கு அரசின் வீடு கிடைக்காதோ என்ற அச்சம் உள்ளது. எனவே இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் த.ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து பாலகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர். இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.