பஞ்ச்கனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து சாவு மும்பையை சேர்ந்தவர்
பஞ்ச்கனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த மும்பையை சேர்ந்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து பலியானார்.
மும்பை,
பஞ்ச்கனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த மும்பையை சேர்ந்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து பலியானார்.
குதிரையில் இருந்து விழுந்தார்
சத்தாரா மாவட்டத்தில் மலைவாசஸ்தலமான பஞ்ச்கனி அமைந்து உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்த பகுதிக்கு வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்தவர் லத்தீப் கரீம் கான் (வயது35). இவர் இங்கிலாந்தில் கப்பலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் இவர் பஞ்ச்கனிக்கு மனைவியுடன் சுற்றுலா சென்று இருந்தார். இதில் இவர் சம்பவத்தன்று குதிரை சவாரி செய்தார். அப்போது எதிரே 4 குதிரைகள் வந்தன. இதனால் லத்தீப் கரீம் கான் சவாரி செய்த குதிரை மிரண்டு ஓடியது. இதில் அவர் குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்தநிலையில் குதிரையும் நிலைதடுமாறி அவர் மீது விழுந்தது.
சோகம்
படுகாயம் அடைந்த அவா் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வைய் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு லத்தீப் கரீம் கானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை குதிரையில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சிவ்ரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.