வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்க வேண்டும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை, வடகிழக்குப் பருவமழை வருவதற்கு முன்பாக நன்கு பராமரித்து வைக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழையின் மூலம் ஏற்படும் அதிகபட்ச நன்மைகளான நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, நீரின் தன்மை மேம்பாடு, கடல் நீர் ஊடுருவலை தடுத்தல் மற்றும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துதல் போன்ற பயன்கள் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நடப்பாண்டுக்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
சென்னை நகரில் அரசு அலுவலகங்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்கள், கல்வி வளாகங்கள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா? என சரிபார்த்து தேவையான ஆலோசனைகளை வழங்க பராமரிப்பு பணிகள் பற்றிய சுவரொட்டிகள் வழங்கப்படுகிறது.
குறும்படம்
சென்னை குடிநீர் வாரியத்திற்கு உட்பட்ட 200 பிரிவு அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளியில் மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களை பராமரிப்பு பணிக் கான தூதுவர்கள் ஆக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரசார ஊர்திகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றிய கட்டுரை, கவிதை, ரங்கோலி மற்றும் சுவர் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பிரபல நடிகர், நடிகைகளை கொண்டு ஒரு குறும்படம் தயாரித்து அதனை கேபிள் டிவி மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புளை முறையாக பராமரித்து, மழைநீர் வீணாகாமல் முழுவதும் பூமிக்குள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.