ஜெயிலில் இருந்தபோது ஜாமீனில் எடுக்காததால் கூட்டாளிகள் உதவியுடன் மனைவியை கணவனே கொல்ல முயன்ற கொடூரம் ஒருவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
ஜெயிலில் இருந்து ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்காத மனைவியை கணவனே கூட்டாளிகள் மூலம் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
அடையாறு,
சென்னை தரமணி கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). அவரது மனைவி சரண்யா (23). ரவுடியான ராஜேஷ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரு வழிப்பறி வழக்கில் ராஜேசை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்த ராஜேசை அவரது மனைவி சரண்யா ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சிறையில் ராஜேசை பார்க்க வந்த உறவினர்களிடம் பலமுறை சொல்லி அனுப்பியும், அவரை ஜாமீனில் வெளியே எடுக்க அவரது மனைவி சரண்யா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் சரண்யாவின் நடத்தையில் ராஜேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மனைவி மீது கோபம் ஏற்பட்டது. இதனால் அவரை பழிவாங்க ராஜேஷ் நேரம் பார்த்து காத்திருந்ததாக தெரிகிறது.
கூட்டாளிகள் உதவியுடன் கொல்ல முயற்சி
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ் வீட்டிற்கு சென்று மனைவி சரண்யாவை சந்திக்காமல், தனது நண்பர்களை சந்தித்து, சரண்யாவை கொன்று பழி வாங்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட ராஜேஷ் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறி, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி சிவசுந்தர் அவென்யு அருகே வர சொன்னார். இதையடுத்து கணவரை காண அங்கு சரண்யா வந்தார். அவரிடம் ராஜேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேசும் அவரது நண்பர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் சரண்யாவை வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். இதைக்கண்ட ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடினர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த சரண்யாவை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கணவர் தப்பினார்
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ராஜேஷ் கூட்டாளி வாத்து என்ற பார்த்தசாரதி (24) என்பவரை கைது செய்தனர், தப்பியோடிய சரண்யாவின் கணவர் ராஜேஷ் உள்பட 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.