சேத்தியாத்தோப்பு அருகே: கார் தீப்பிடித்து எரிந்தது; டிரைவர் உடல் கருகி பலி - ஏ.சி. போட்டு தூங்கியபோது பரிதாபம்

சேத்தியாத்தோப்பு அருகே கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உடல் கருகி பலியானார். ஏ.சி. போட்டு தூங்கியபோது நடந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-

Update: 2018-10-26 21:45 GMT
சேத்தியாத்தோப்பு, 


கும்பகோணத்தில் இருந்து ஒரு கார் சென்னை நோக்கி வந்தது. இந்த கார் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தது. அப்போது டிரைவர் காரை சாலையின் ஓரம் நிறுத்தினார். பின்பு அவர் காரின் கதவை மூடிவிட்டு ஏ.சி.போட்டு தூங்கியதாக தெரிகிறது.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த காரின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே உள்ளே இருந்த வாலிபர் கூச்சல் போட்டார். இதை அந்த வழியாக வந்த விவசாயி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், காரின் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனிடையே கார் முழுவதும் தீ பரவி வேகமாக எரியத்தொடங்கியது.

இது பற்றி உடனடியாக அந்த விவசாயி, சோழத்தரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. டிரைவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியா னார். சோழத்தரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காருக்குள் உடல் கருகி கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த காரின் எண் டி.என்.22 டி.1272 ஆகும். காருக்குள் உடல் கருகி கிடந்த டிரைவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அதிகாலை என்பதால் காரை ஓட்டி வந்த டிரைவருக்கு தூக்கம் வந்திருக்கலாம், எனவே அவர் சாலையோரத்தில் நிறுத்தி காரின் கதவை பூட்டிவிட்டு ஏ.சி. போட்டு தூங்கி இருக்கலாம் எனவும், அந்த சமயத்தில் கார் தீ பிடித்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்