சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சதாசிவம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-10-26 22:41 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரம், காரிப்பட்டியை சேர்ந்த தனம் ஆகிய இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வார்டில் மேலும் சிலர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கென்று சேலம் மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ள தனி அதிகாரியும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனருமான சதாசிவம் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பன்றிக்காய்ச்சலுக்கான போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது டீன் ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து இணை இயக்குனர் சதாசிவம் கூறும் போது, ‘சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்காக தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இவர்களில் 50 பேர் வரை உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு தற்போது யாரும் சிகிச்சை பெற்று வரவில்லை. பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்‘ என்றார்.


மேலும் செய்திகள்