சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் 100-க்கும் மேற்பட்டோர் கைது

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியதை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-27 00:00 GMT
மும்பை, 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியதை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் மோதல்

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து நாகேஸ்வர ராவை இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நியமித்தது. இதனுடன் ஏராளமான சி.பி.ஐ. அதிகாரிகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் கட்டாய விடுப்பை எதிர்த்து, அலோக் வர்மா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் போராட்டம்

இந்தநிலையில் நேற்று மும்பையில் காங்கிரஸ் கட்சியினர், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியினர் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் சி.எஸ்.டி. ரோட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் சி.பி.ஐ. இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

100-க்கும் மேற்பட்டோர் கைது

இந்தநிலையில் பேரணியில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் போலீசாரின் தடையை மீறி சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், எஸ்.சி. பிரிவு தலைவர் கச்ருயாதவ் உள்ளிட்டவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் போராட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ஏக்நாத் கெய்க்வாட், பிரியாதத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்