சி.பி.ஐ. இயக்குனருக்கு கட்டாய விடுப்பு: மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது

சி.பி.ஐ. இயக்குனருக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து பெங்களூருவில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-10-26 23:00 GMT
பெங்களூரு, 

சி.பி.ஐ. இயக்குனருக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து பெங்களூரு வில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ. புலன் விசாரணை அமைப்பில் இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் இடையே பனிப்போர் எழுந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. ரபேல் போர் விமான கொள்முதலில் நடந்துள்ள ஊழலை மறைக்கவே சி.பி.ஐ. இயக்குனர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு-பல்லாரி ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை தகர்ந்துவிட்டது

சி.பி.ஐ. விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மோடியை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாட்டின் நம்பத்தகுந்த நிறுவனமான சி.பி.ஐ. அமைப்பை மத்திய அரசு சீரழித்துவிட்டது. அந்த அமைப்பு மீது சாமானிய மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அந்த அமைப்பில் பிரதமர் மோடியின் தலையீட்டால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. அமைப்பு பரிசீலித்து வந்தது.

ஊழல் பகிரங்கமாகிவிடும்

அந்த ஆவணங்களை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ஆய்வு செய்தால், ஊழல் பகிரங்கமாகிவிடும் என்று கருதி, அவரையும், கூடுதல் இயக்குனரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. சி.பி.ஐ. அமைப்பானது, பாரதீய ஜனதா அமைப்பு என்று அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி சி.பி.ஐ. அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த அலுவலகத்தின் முன் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரும் உள்ளே நுழையாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்