அர்ஜூன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு: ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய நடிகை சுருதி ஹரிகரனுக்கு கோர்ட்டு உத்தரவு

நடிகர் அர்ஜூன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யும்படி நடிகைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2018-10-26 22:30 GMT
பெங்களூரு, 

நடிகர் அர்ஜூன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யும்படி நடிகைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

மானநஷ்ட வழக்கு

தமிழ், கன்னடத்தில் பிரபல நடிகராக இருப்பவர் அர்ஜூன். இந்த நிலையில் ‘விஸ்மய’ (தமிழில் நிபுணன் என வெளியானது) என்ற கன்னட படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் பரபரப்பு குற்றச்சட்டை கூறினார். இந்த குற்றச்சாட்டை அர்ஜூன் முற்றிலுமாக மறுத்தார்.

மேலும் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகை சுருதி ஹரிகரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கை பெங்களூரு மேயோ ஹாலில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் நடிகர் அர்ஜூன் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார். தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேச நடிகை சுருதி ஹரிகரனுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அன்றைய தினமே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோர்ட்டு முடிவு செய்திருந்தது.

ஆட்சேபனை மனுவை...

இந்த நிலையில் நடிகை சுருதி ஹரிகரன் சார்பில் வக்கீல் ஜாய்னா கோதாரி அந்த கோர்ட்டில் ஆஜராகி, ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகை சுருதி ஹரிகரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்