பருவமழை காலம்: பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் - கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்

பருவமழை காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2018-10-26 23:30 GMT
தர்மபுரி,

பருவமழை காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குளோரின் கலந்த குடிநீரை வழங்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக வைத்து கொள்ள ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகளை அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் வாயிலாக பள்ளிகளில் அவ்வப்போது கொசு மருந்து அடிக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்புகள் இல்லாத பள்ளிகளுக்கு உடனடியாக இணைப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பள்ளி மாணவ- மாணவிகளிடையே குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்துவது மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல்களை தெரிவித்து அதற்கான காரணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் நாகலட்சுமி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் சுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்