திருவிடைமருதூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் பெண்களை தள்ளி விட்டு மதுபிரியர்கள் கடையை திறக்க முயன்றதால் பரபரப்பு
திருவிடைமருதூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளி விட்டு மதுபிரியர்கள் கடையை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த ஆடுதுறை அருகே அம்மன்குடி நந்திவனம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடையை மூடக்கோரி கடந்த 19-ந் தேதி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாசில்தார் ஜானகிராமன், அந்த மதுக்கடையை சில நாட்களில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் உறுதியளித்தபடி மதுக்கடை மூடப்படாததால் முற்றுகை போராட்டம் நடத்த நந்திவனம் கிராம மக்கள், போலீசாரிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுக்கடை முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்குமார், ஆனந்தி உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் மதுக்கடை முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் விஜயபாலன் உள்ளிட்ட நந்திவனம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக மதுக்கடையின் கதவு மூடப்பட்டு இருந்தது.
அப்போது அம்மன்குடி பகுதியைச் சேர்ந்த மதுபிரியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அந்த மதுக்கடைக்கு மதுவாங்குவதற்காக வந்தனர். அப்போது போராட்டம் காரணமாக மதுக்கடையின் கதவு மூடப்பட்டு இருந்ததால் அங்கு வந்த மதுபிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளிவிட்டு மூடப்பட்டிருந்த மதுக்கடையை திறக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், மதுபிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடையை திறக்க முயன்ற மதுபிரியர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த மதுக்கடை தீபாவளிக்குள் மூடப்படும் என போலீசார் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி உள்பட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.