போக்குவரத்து விதிகளை மீறிய 21 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் போக்குவரத்து விதிகளை மீறியதாக 21 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
வேலூர்,
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, அதிகபாரம் ஏற்றிச்செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 930 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 17,110 வழக்குகள், மதுகுடித்துவிட்டு ஓட்டியதாக 3,858 வழக்குகள், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்றதாக 1,473 வழக்குகள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றதாக 6,595 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக 57 ஆயிரத்து 96 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தற்போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போலீசார் பரிந்துரைசெய்து வருகின்றனர். போலீசாரின் பரிந்துரையின்பேரில் ஓட்டுனர் உரிமம் ரத்துசெய்யப்படுகிறது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக வேலூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 615 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.