தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-10-26 21:30 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள பாண்டியங்குப்பத்தில் இருந்து வினைதீர்த்தாபுரம் நோக்கி மரம் ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த மினிவேனை வினைதீர்த்தாபுரத்தை சேர்ந்த தனபால் என்பவர் ஓட்டி வந்தார். மேலும் இந்த மினிவேனில் ஏற்றப்பட்டிருந்த மரத்தின் மேல் தொழிலாளர்களான வினைதீர்த்தாபுரத்தை சேர்ந்த ராமர்(வயது 45), கருப்பன், ஏழுமலை ஆகியோர் அமர்ந்து பயணம் செய்தனர். சின்னசேலம் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் ராமர், கருப்பன், ஏழுமலை ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். டிரைவர் தனபால் காயமின்றி உயிர் தப்பினார்.

இதற்கிடையே பலத்த காயமடைந்த கருப்பன், ஏழுமலை உள்ளிட்ட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பன், ஏழுமலை ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (35). சம்பவத்தன்று இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கோலியனூர் கூட்டுசாலையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் அருகே செல்லும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பாக்யராஜ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பாக்யராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்