கோவை ரெயில் நிலையத்தில்: திருட்டை தடுக்க கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள்
திருட்டை தடுக்க கோவை ரெயில்நிலையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவை,
கோவை ரெயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். எனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவை ரெயில் நிலைத்தில் 72 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக வரும். இதனால் குற்றசம்பவங்களை தடுக்க கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை ரெயில்நிலையத்திற்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வரும் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வயதான பயணிகளை ரெயில் நிற்கும் நடைமேடைக்கு அழைத்து செல்ல பேட்டரி கார்கள், எக்ஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டு உள்ளது.
பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு ஆசாமிகள் பலர் சுற்றித்திரிந்து வருவார்கள். அவர்களை கண்காணிக்க ரெயில்வே போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். ஏற்கனவே இங்கு 72 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக பயணிகள் வருவார்கள். அப்போது நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோவை ரெயில் நிலையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ரெயில்வே போலீசார் கண்காணிப்பார்கள். தற்போது கோவை ரெயில்நிலையத்தில் மொத்தம் 80 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.