18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு; டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முடிவு

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளனர்.

Update: 2018-10-26 23:00 GMT

மதுரை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்து பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்று அவர்களுடன் டி.டி.வி.தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து நடத்தப்பட்ட இந்த ஆலோசனை சுமார் 2½ மணி நேரம் நீடித்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட 16 பேரும், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு ஆகியோரும் பங்கேற்றனர். வக்கீல்கள் ராஜா செந்தூர்பாண்டியன், வேலு கார்த்திகேயனும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருக்கிறோம். முதல்–அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு அளித்ததற்காக எங்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கையை சபாநாயகர் எடுத்தார். அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு எதிராக சட்டசபையில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

எனவே சபாநாயகர் எடுத்த நடவடிக்கை தவறு என நிரூபிக்கவே, தீர்ப்பை எதிர்த்து 18 பேரும் மேல்முறையீடு செய்ய உள்ளோம். தினகரனுடன் சேர்ந்ததால் 18 பேர் மீது சபாநாயகர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கில் வேறு தீர்ப்பும், இங்கு வேறு தீர்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவிடம் தெரிவிக்கப்படும்.

அ.தி.மு.க.வில் உள்ள மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பிறகு எங்கள் பக்கம் வருவார்கள். ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்களும் வரவேண்டிய நேரத்துக்கு வருவார்கள்.

18 பேரும் மேல்முறையீடு செய்வதில் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளோம். மேல்முறையீடு செய்யப்பட்டாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு காரணம், வழக்கை விரைந்து முடித்து நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். மிக விரைவில், அதாவது 2 அல்லது 3 நாட்களில் மேல்முறையீடு செய்வோம்.

எங்கள் தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி வருகிற நவம்பர் 10–ந் தேதி முதல் உண்ணாவிரதம் நடைபெறும். இந்த உண்ணாவிரதம் ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறது. ஆர்.கே.நகரில் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்கிறார்.

இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சம் பேராக சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது. கட்சிக்கு எதிராக செயல்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். இடைத்தேர்தலில் இரட்டை இலையை தோற்கடித்து நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்