கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. இதில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உணவு மானியத்தொகையை ஒரு குழந்தைக்கு ரூ.5ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுப்பில் பெரிய அண்டாக்களை வைத்து சமையல் செய்து தங்களது எதிர்ப்பை காட்டினர். பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு சக ஊழியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே உணவு பரிமாறினர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.