கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-26 22:30 GMT
புதுக்கோட்டை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 27 சத்துணவு ஊழியர்களை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்து இரவில் விடுத்தனர்.

விடுவிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலையில் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு சாமியானா பந்தல் அமைத்து 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டபூர்வ மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையினை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் களுக்கு போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே சமையல் செய்து, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சிலர் கோரிக்கை அட்டையை மாலையாக அணிந்து கொண்டு பிச்சை எடுத்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்தையடுத்து திருக்கோகர்ணம் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்