அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை

அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-10-26 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி பேசியதாவது:–

மனோகரன்:– பூளவாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதல் உள்ளது. தனியார் உரக்கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தினால் அவை பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதில்லை. எனவே உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்துகளை விற்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

சின்னச்சாமி:– பருவமழை நன்கு பெய்துள்ள நிலையில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை உடனே நிறைவேற்றி தர வேண்டும். திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். விவசாய கூட்டங்களில் விவசாயிகளின் கோரிக்கை பலமுறை வலியுறுத்தப்பட்டு, அவை நிறைவேற்றப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

கோபால்:– தேங்காய் கொப்பரை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.120–க்கு மேல் இங்குள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இது படிப்படியாக ரூ.40 வரை குறைத்து விட்டனர். எனவே அரசு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

காளிமுத்து:– தாராபுரம் பகுதியில் அமராவதி கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் கிராமங்களுக்கு உரிய குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பருவமழை நன்கு பெய்த நிலையில் பொதுமக்கள் குடிநீருக்கு அவதியடையும் நிலை உள்ளது. எங்கள் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இதனால் விலை கொடுத்து வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

குமார்:– இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் தட்கல் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதால் இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மின்சாரம் கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மவுன குருசாமி:– ஆனைமலையாறு– நல்லாறு திட்டத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தற்போது அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

சவுந்தர்ராஜன்:– உடுமலை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உரம் கையிருப்பு இல்லை. குரல்குட்டை, சின்னவீரம்பட்டி, நீலாம்பூர், மடத்துக்குளம் என பல்வேறு பகுதிகளில் உரம் இல்லை. இதனால் தனியார் உரக்கடைகளில் அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கும் நெருக்கடியை அலுவலர்கள் உருவாக்குகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போதிய உரம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுசூதனன்:– மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலும், தென்னையில் சுருள்புழு தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுபோல் ஏராளமான விவசாயிகள் பேசினர். இந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் பிரதம மந்திரியின் பஸல் பீமா திட்டம் ராபி 2018–2019 நெல்–2 (சம்பா, தாளடி, பி‌ஷனம்) பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்வது தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டு, துண்டுபிரசுரங்களை விவசாயிகளிடம் வழங்கினார். இந்த வாகனம் மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், காங்கேயம், குண்டடம், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்கிறது.

இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரேம்குமார், தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஷ் பச்சாவு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அரசப்பன், துணை கலெக்டர்கள் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்