நெல்லையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
நெல்லை,
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை உயர்வை வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் நாள் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்த பணம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த மாதம் ஜனவரி மாதம் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதனால் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் நெல்லையில் நேற்று காலை போக்குவரத்து கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச. பேரவை அமைப்பு செயலாளர் தர்மன், துணை பொதுச்செயலாளர் மகா விஷ்ணு, செயலாளர் எபனேசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விரைவு போக்குவரத்து கழக பனிமனை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றனர்.
பஸ் சேவை பாதிப்பு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. மாற்று டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.