நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
காத்திருப்பு போராட்டம்
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. சத்துணவு ஊழியர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். விடிய, விடிய போராட்டம் இந்த நடந்தது.
2-வது நாளாக...
நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். காலையில் உணவு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உட்கார்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அப்போது சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைதலைவர் தமிழரசன் கூறுகையில், “காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 14-வது மாநில மாநாட்டில் எடுத்த முடிவின் படி நேற்று முதல் (அதாவது நேற்று முன்தினம்) காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் 2,500 சத்துணவு ஊழியர்கள் உள்ளனர். குழந்தைகள் நலன் பாதிக்காதவாறு போராட்டம் நடத்துகிறோம். மாணவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தான் போராட்டத்தில் கலந்து கொள்கிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லை என்றால் போராட்டம் வேறு மாதிரி உருவெருக்கும்“ என்று கூறினார். இந்த போராட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.