திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 200 பேர் கைது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-26 22:30 GMT
திருவாரூர்
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். உணவூட்டு மானியத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜகணபதி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சங்கத்தின் மாநில செயலாளர் அய்யம்மாள், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்