உப்பூர் அனல் மின் நிலைய பணிகள்; கலெக்டர் ஆய்வு

உப்பூர் அனல் மின் நிலைய பணிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-10-26 23:00 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர், வலமாவூர் மற்றும் திருப்பாலைக்குடி ஆகிய கிராமப்பகுதிகளை உள்ளடக்கி ரூ.12 ஆயிரத்து 665 கோடி மதிப்பீட்டில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கியது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கொதிகலன் மற்றும் ஜெனரேட்டர் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அப்பகுதிகளை சார்ந்த கிராம பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் – உப்பூர் திட்டம் தலைமை பொறியாளர் மாரிமுத்து, மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் சின்னையா, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்