தூத்துக்குடியில் பெண்கள் சாலை மறியல் மழைநீரை அகற்ற கோரிக்கை
தூத்துக்குடியில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி நேற்று பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி நேற்று பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தூத்துக்குடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த மழை நீர் மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில், எங்கள் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. 2 நாட்களாக அந்த மழை நீரை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, தாளமுத்துநகர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மழைநீர் வெளியேற்றம்
இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் உங்கள் பகுதியில் தேங்கி உள்ள மழைத்தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும், மழை நீர் உப்பளம் வழியாக கடலில் கலக்க ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி சிறிது நேரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மழை தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதை தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.