டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஆய்வு: பள்ளிகளில் கொசுப்புழு அறிகுறி இருந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொசுப்புழு உற்பத்தியாகும் அறிகுறி இருந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-26 22:00 GMT
தேனி,

மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா காய்ச்சல் ஆகியவை கொசுக்களால் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் பல்வேறு துறை அலுவலர்களும், நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அனைத்து பள்ளிகளின் உள்வளாகம் மற்றும் வெளிப்புற வளாகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேனி மாவட்டத்தில் உள்ள 931 பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் பள்ளிகளில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் பணி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்ற ஆய்வு செய்வதோடு, சுகாதாரமின்மை காணப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு உடனே சரி செய்யுமாறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கான அறிகுறி தென்பட்டால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலை தடுக்கும் முறை, கைகழுவும் முறை, வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதம் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளிகளில் காலை நேர இறைவணக்க கூட்டங் களில் விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டு வருகின்றன. மேலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்