விபத்தால் கோமா நிலைக்கு சென்ற பட்டதாரியின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு; ஈரோடு மக்கள் நீதிமன்றம் மூலம் உத்தரவு

விபத்தால் கோமாநிலைக்கு சென்ற எம்.சி.ஏ. பட்டதாரியின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க ஈரோடு மக்கள் நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டது.

Update: 2018-10-26 23:30 GMT

ஈரோடு,

கரூர் மாவட்டம் தென்னிலை ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்தவர் லிங்கதுரை. அந்த பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவருடைய மகன் தினேஷ் (வயது 25). எம்.சி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் 27–ந் தேதி வெள்ளக்கோவில் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி தினேஷ் மீது பயங்கரமாக மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் கோமாநிலைக்கு தள்ளப்பட்டார்.

உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவருடைய உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தினேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை சுய உணர்வு வராமல் கோமா நிலையிலேயே இருந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து மருத்துவ செலவு அதிகமாக இருந்ததால் தினேசை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பராமரித்து வருகிறார்கள். இன்னும் கோமா நிலையிலேயே அவர் உள்ளார்.

இதற்கிடையே தினேசின் இந்த நிலைமையை காரணம் காட்டி இழப்பீட்டு தொகை கேட்டு தினேசின் தாயார் சக்தி (48) ஈரோடு சிறப்பு சப்–கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன் கடந்த 18–4–2018 அன்று பாதிக்கப்பட்ட தினேசின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 300 வழங்க, இன்சூரன்சு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த இழப்பீட்டு தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த உத்தரவில் கூறி இருந்தார்.

ஆனால் இன்சூரன்சு நிறுவனம் தொகையை வழங்கவில்லை. எனவே கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி ஈரோடு சிறப்பு சப்–கோர்ட்டில் சக்தி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 40 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் ஈரோடு கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி ஏற்பாடு செய்து இருந்தார். இதில் தங்கள் வழக்கை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சக்தி மனுகொடுத்தார். மக்கள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இன்சூரன்சு நிறுவனமும் ஒப்புக்கொண்டது. அதன்படி மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி, சிறப்பு சார்பு நீதிபதி ஜி.குலசேகரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. 2 தரப்பு சார்பில் வக்கீல்களும் பங்கேற்றனர். இதில் இன்சூரன்சு நிறுவனம் தினேசின் பெற்றோருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டனர். அதனை சக்தி மற்றும் லிங்கதுரையும் ஏற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இழப்பீட்டு தொகையை 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற உத்தரவுடன், ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி என்.உமாமகேஸ்வரி நேற்று தினேசின் பெற்றோர் சக்தி, லிங்கதுரையிடம் வழங்கினார்.

அவர்கள் கண்ணீர் மல்க அந்த உத்தரவை பெற்றுக்கொண்டனர். அப்போது, நீதிபதி என்.உமாமகேஸ்வரி, உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை இந்த தொகையால் ஈடுசெய்ய முடியாது என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

விபத்தில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தினேசுக்கு 3 சகோதரிகள் உள்ளனர். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.சி.ஏ. முடித்து விட்டு கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி நியமனம் பெற்று இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டு தினேஷ் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தினேசின் பெற்றோர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.சங்கீதா ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

மேலும் செய்திகள்