ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
ஈரோடு,
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 2016–ம் ஆண்டு முதல் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். அரசு மானியத்தை ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
விடிய, விடிய நடந்த இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் சுப்புலட்சுமி, சசிகலா, கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் மூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆண்டாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலுக்குள் தரையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அங்கேயே உணவு சமைத்தும் சாப்பிட்டனர்.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறும்போது, ‘‘எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் இரவு, பகல் பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே எங்களுடைய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.