புஞ்சைபுளியம்பட்டியில் பன்றிக்காய்ச்சலுக்கு டிரைவர் பலி

புஞ்சைபுளியம்பட்டியில் பன்றிக்காய்ச்சலுக்கு டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-26 22:30 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அன்பழகன் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி சகுந்தலா (40). இவர்களுக்கு பிரீத்தா (18), ரித்விகா (16) என 2 மகள்கள் உள்ளனர். ராமமூர்த்திக்கு கடந்த 19–ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது ராமமூர்த்தியின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது, அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ராமமூர்த்தி கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையொட்டி ராமமூர்த்தியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் மல்லியம்பட்டி பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கொசுமருந்து அடித்தல், நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்குதல் மற்றும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்