நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 60 பேர் கைது

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வதுநாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-26 23:00 GMT
நாகப்பட்டினம்,
தகுதி வாய்ந்த சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். சத்துணவு மையத்திற்கு சமையல் எரிவாயு மானியத்தை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காலை 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, இணை செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன் வரவேற்றார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தநிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 50 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்