தீபாவளி கூட்ட நெரிசலில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் - கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தீபாவளி கூட்ட நெரிசலின் போது குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்காக காவல் துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் கூறினார்.
கடலூர்,
அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்காக புத்தாடைகள் வாங்குவதற்காக ஏராளமானவர்கள் கடலூர் நகருக்கு வந்து செல்கிறார்கள்.
தீபாவளி நெருங்க, நெருங்க புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதோடு நடைபாதையோர கடைகளும் பெருகும் என்பதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்த சமயங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதால் தீபாவளி கூட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். இதுவரை 12 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தீபாவளி கூட்டத்தில் ஜேப்படி, இரு சக்கர வாகனங்கள் திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக கடலூர்பஸ் நிலையம் அருகே 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து உள்ளோம். அந்த கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். மேலும் கடை வீதிகள் முழுவதையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். கடைக்காரர்கள் கடைகளில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சாலையை நோக்கி திருப்பி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். எனவே போலீஸ் கண்காணிப்பு கடுமையாக இருப்பதால் குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் கூறினார்.