தி.மு.க. மாநில மகளிர் அணி புரவலர் மரணம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அஞ்சலி
மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜகான் பேகம் மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய உடலுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல்,
தி.மு.க. மாநில மகளிர் அணி புரவலராகவும், தலைமைக்கழக பேச்சாளராகவும் இருந்தவர் நூர்ஜகான் பேகம் (வயது 73). திண்டுக்கல்லை சேர்ந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து நூர்ஜகான் பேகத்தின் உடல், திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திண்டுக்கல்லுக்கு வந்தார். இதையடுத்து அவர் நூர்ஜகான் பேகத்தின் வீட்டுக்கு சென்று அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘மறைந்த நூர்ஜகான் பேகம் கருணாநிதியுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டவர். அவர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். அவருடைய மறைவு தி.மு.க. மகளிர் அணியினருக்கு பெரிய இழப்பாகும், என்றார்.
முன்னதாக நேற்று காலையில் கனிமொழி எம்.பி.யும், நூர்ஜகான் பேகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நிருபர்களிடம் அவர் கூறும்போது, நூர்ஜகான் பேகம் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர் ஆவார். அவர் மகளிர் அணி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். நான் பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது எல்லாம், என்னுடைய தாயை போல தைரியம் கூறினார். அவருடைய மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும், என்றார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் நூர்ஜகான் பேகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திண்டுக்கல் நகர் சந்துக்கடை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.