தர்மபுரியில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவேந்திரன் வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க மாவட்ட செயலாளர் காவேரி போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் இளங்குமரன், இளவேனில், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தெய்வானை, மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
36 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியம் என்ற அடிப்படையில் மிகக்குறைந்த ஊதியத்தை பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படும் நிலையை மாற்றி வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் நியாயமான ஓய்வூதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்.
2016-ம் ஆண்டு சட்டசபை கூட்டதொடரில் ஏற்கப்பட்ட சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் பல்வேறு அரசு ஊழியர் சங்க கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.