சிறுசேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்யலாம் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

பொதுமக்கள் சிக்கனமாக இருந்து சேமிக்கும் பணத்தை, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-10-25 22:30 GMT
நாமக்கல்,

சிக்கனத்தின் அவசியம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உலக சிக்கன நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்பட உள்ளது.

சிக்கனத்தை கடைபிடிக்க தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, வீண் விரயம் செய்யாமல், ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் திட்டமிட்டு செலவிட வேண்டும்.

அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்வது, சமூக தீமைகளில் ஈடுபட்டு பொருள் இழப்புக்கு வழிவகை செய்யாமல் இருப்பது போன்ற நல்ல பண்புகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சிக்கனமாக இருந்து சேமிக்கும் பணத்தை பொதுமக்கள், அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து சிறுசேமிப்பு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு வரியில்லா வருமானமாக நிதி ஆதாரத்தை அளித்து அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்