ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மருந்துகள், மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளன கலெக்டர் தகவல்

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளன என்று தொன்னையான் கொட்டாய் பகுதியில் சுகாதார, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

Update: 2018-10-25 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்தனப்பள்ளி ஊராட்சி தொன்னையான் கொட்டாய் பகுதியில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் நேற்று நேரில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். குடிநீர் தொட்டிகளை பார்வையிட்ட அவர் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தொற்றுநோய்களை தவிர்க்கும் வகையில் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், சுகாதார விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் உருவாகாத வகையில் குடிநீர் தொட்டிகளை பராமரித்து உரிய முறையில் மேல் மூடி அமைப்பதோடு, சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் 11 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது. அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளித்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. காய்ச்சல் மற்றும் தொற்று நோய் உள்ள நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். மாவட்ட அளவில் சுகாதார துறை ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி, பேருராட்சி, மற்றும் கல்வித்துறை அலுவர்கள் கொண்ட குழுவினர் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்ச்சல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்ன வெங்கடேசன், ராஜா, பூச்சியல் வல்லுனர் டாக்டர் அனுராதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்