அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு ஒரே விமானத்தில் பயணித்த சரத்பவார், ராஜ் தாக்கரே
அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு ஒரே விமானத்தில் சரத்பவார், ராஜ் தாக்கரே பயணம் செய்தனர்.
மும்பை,
நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விதர்பா சென்று இருந்தார். இதையடுத்து அவர் மும்பை வருவதற்காக அவுரங்காபாத் விமான நிலைய ஓய்வு அறையில் இருந்தார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் அந்த விமான நிலைய ஓய்வறைக்கு வந்தார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒரே விமானத்தில் அருகில் அமர்ந்து மும்பை வந்தனர். அப்போது அவர்கள் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசி வந்ததாக தெரிகிறது.
பா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியிடம் விருப்பம் தெரிவித்து இருந்ததாக தகவல்கள் பரவின. இந்தநிலையில் ராஜ் தாக்கரேவும், சரத்பவாரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.