பேச்சுவார்த்தையில் உடன்பாடு: அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Update: 2018-10-25 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி கடந்த 23-ந்தேதி சட்டசபை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து கவர்னர் கிரண்பெடி பேசினார். அரசின் நிதிநிலை குறித்து அவர்களிடம் விளக்கினார். அப்போது கவர்னருக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி எழுந்து உடனடியாக தனது அறைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கவர்னர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றனர்.

நேற்று 3-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை அருகே கூடிய ஊழியர்கள் அங்கு அரை நிர்வாணத்துடன் தங்களது வயிற்றில் ஈரத்துணியை போட்டு வரிசையாக படுத்து நூதனமாக போராட்டம் நடத்தினர். சம்பளம் இல்லாமல் எப்படி நாங்கள் பசியாற முடியும்? குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது? என்று அவர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அரசு சார்பு நிறுவனங்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் புதுவை அரசு நிதிச்செயலர் கந்தவேலு மற்றும் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யு. தலைவர் சீனுவாசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. புருஷோத்தமன், என்.ஆர்.டி.யு.சி. மோகன்தாஸ், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ஞானசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் அபிசேகம், சேதுசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் புதுவை அரசு நிறுவனங்கள், முகமைகள், கூட்டுறவு நிறுவன ஊழியர் மற்றும் தொழிலாளர்களுக்கு உள்ள சம்பள நிலுவைத் தொகையில் 5 மாத சம்பளத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 நாள் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. நிர்வாகிகளின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்