முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-25 22:45 GMT
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கொசவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 38). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சண்முகம், வேலைக்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ், ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(23), அத்திவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ்(22) ஆகியோருடன் சேர்ந்து, சண்முகத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சண்முகத்தை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த சண்முகம், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், சண்முகத்தை தாக்கியதாக விக்னேஷ், கார்த்திக், நாகராஜ் ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்