அடுத்தவர் மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி மனு: சென்னையை சேர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

அடுத்தவர் மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி மனு அளித்த சென்னையை சேர்ந்தவருக்கு மதுரை ஐகோர்ட் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.

Update: 2018-10-25 22:30 GMT

மதுரை,

சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது சிராஜூதின் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:–

சென்னை மண்ணடியில் ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறேன். இங்கு நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்த கோமதி சங்கரி (வயது 31) என்பவர் வேலைபார்த்தார். அவரது கணவர் கோமதிசங்கரியையும், அவரது குழந்தைகளையும் சரிவர கவனிக்கவில்லை.

இந்தநிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற கோமதி சங்கரியை, அவரது கணவரும், அவரது வீட்டாரும் சென்னைக்கு வரவிடாமல் தடுத்து அடித்து துன்புறுத்துவதாக தெரியவந்தது. எனவே அவரையும், அவரது 2 குழந்தைகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், அடுத்தவரின் மனைவியை ஆஜர்படுத்த வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மனுவை அனுமதித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் நடவடிக்கைக்காக அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்