இலுப்பூர் அருகே பயங்கரம்: சிறுமி கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை

இலுப்பூர் அருகே சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-25 23:15 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதில் மூத்த மகள் ஷாலினி(வயது 4) நேற்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, ஷாலினியை காணவில்லை. இதனால் குடும்பத்தினர் அவளை தேடினர்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி பிணமாக கிடந்தாள். இதை கண்ட ஷாலினியின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதையடுத்து இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் தலைமையில் இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமியை கொன்றவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலுப்பூர் அருகே சிறுமி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்