சிவகங்கை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்; 4 பேர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதால் இந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-10-25 22:15 GMT

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை, தட்ப வெட்ப மாறுதல் காரணமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. காரைக்குடி பர்மா காலணி உள்ளிட்ட பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் மிகவும் பாதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிலர் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி, மூட்டு வலி, சளி, இருமல் உள்ளிட்டவைகள் காணப்பட்டு வருவதால் அவர்கள் தங்களுக்கு சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் ஏதும் பரவி உள்ளதா என்றும் அச்சப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் பரிசோதனை செய்த போது, அங்குள்ள மருத்துவர்கள் இது சாதாரண காய்ச்சல் தான் என்று கூறி அவர்களுக்கு சிகிச்சையளிப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காய்ச்சலால் காரைக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்புவனம் அருகே உள்ளது முதுவன்திடல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி அமராவதி(வயது 58), மற்றும் அழகு(72), கதிரேசன்(70) ஆகியோர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்தனர். இதில் அழகு மற்றும் கதிரேசன் ஆகிய 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளனர்.

இதையடுத்து இந்த கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று இந்த கிராமத்தில் பூவந்தி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகதார பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் காலை முதல் மாலை வரை முகாமிட்டு கிராம மக்களை பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:– தற்போது பரவி வரும் இந்த காய்ச்சலை தடுக்க சுகாதார துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சாதாரண காய்ச்சல் தான். இந்த காய்ச்சலுக்கு தகுந்த மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று குணமாகி செல்லலாம். மேலும் வீடுகள் தோறும் சென்று சுகாதார துறை சார்பில் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்