எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

Update: 2018-10-25 22:30 GMT

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா வருகிற 28, 29, மற்றும் 30–ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 30–ந்தேதி தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதனையொட்டி அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், டாக்டர் முத்தையா, மாரியப்பன் கென்னடி உள்பட கட்சி நிர்வாகிகள் பசும்பொன் வந்து தேவர் நினைவிடத்தில் வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அபிராம் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், மாநில மருத்துவரணி இணை செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:–

டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வருகிற 30–ந்தேதி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். பசும்பொன் வரும் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு பணமே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. மட்டுமே வெற்றி பெறும். அடுத்தமுறை முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வரும்போது டி.டி.வி.தினகரன் முதல்–அமைச்சராக தான் வருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்