பட்டுக்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் பரமக்குடி கோர்ட்டில் 9 பேர் சரண்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி கோர்ட்டில் 9 பேர் சரணடைந்தனர்.

Update: 2018-10-25 23:00 GMT

பரமக்குடி,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரவுடி கார்த்திக் (வயது 26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் நரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(27) உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த 7 பேரும் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 24–ந்தேதி பிரகாஷ் உள்பட 7 பேரும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு சரக்கு வாகனத்தில் திரும்பி வந்தனர்.

அப்போது ஒரு கும்பல் வழிமறித்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பிரகாசை கொலை செய்தது. இது சம்பந்தமாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு தப்பியோடிய மர்ம கும்பலை தேடிவந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த அருண் மன்னார்(28), பிரசாந்த்(23), மணி(24), மதன்(23), மணிகண்டன்(22), கலையரசன்(22), ஆசைப்பாண்டி(22), பிரகாஷ்ராஜ்(22), பாரதி(22) ஆகியோர் நேற்று பரமக்குடி குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 9 பேரையும் வருகிற 29–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்