குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-10-25 22:15 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி ஓரசோலை அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பன் என்பவரது மகன் சிவக்குமார் (வயது 30), வெல்டிங் தொழிலாளி. அவருடைய மனைவி ஞானசுந்தரி (25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் சிவக்குமாரின் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே தனியாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தன. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஞானசுந்தரி வீட்டில் இருக்கிறாரா? என்று பார்க்க சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது ஞானசுந்தரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவகுமாருக்கும், கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஞானசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவருக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால் மேல் விசாரணை மேற்கொள்ள அறிக்கையை குன்னூர் உதவி கலெக்டருக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை உதவி கலெக்டர் விசாரணைக்கு வருவதை அறிந்ததும் ஞானசுந்தரியின் உறவினர்கள், கிராம மக்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ரவிக்குமார் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஞானசுந்தரியின் கணவர் சிவக்குமார், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஞானசுந்தரியின் குடும்பத்தினருக்கு சாந்திராமு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். மேலும், அவர் விசாரணை குறித்து போலீசார் கேட்டறிந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் ஞானசுந்தரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஞானசுந்தரி 2 நாட்களுக்கு முன்பு தனது அண்ணன், தம்பிக்கு போன் செய்து கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் தான் மிகவும் மனவேதனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இந்த காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார். அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்