கோத்தகிரி அருகே கரடிகள் தாக்கி விவசாயி படுகாயம்

கோத்தகிரி அருகே கரடிகள் தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-25 22:30 GMT

கோத்தகிரி,

கீழ்கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் சகாயபுரத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 48), தேயிலை விவசாயி. இவர் நேற்று காலை 6 மணியளவில் கோழிமராடா பகுதியில் உள்ள தனது தேயிலை தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது தேயிலை தோட்டத்தில் மறைந்து இருந்த 2 கரடிகள் திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கின. இந்த தாக்குததில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். மேலும், கரடிகள் தாக்கியதில் நடராஜ் பலத்த காயம் அடைந்தார். கரடிகளிடம் இருந்து காப்பாற்றும்படி அவர் சத்தம்போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து கரடிகளை விரட்டி நடராஜனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சோலூர்மட்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கீழ்கோத்தகிரி வனச்சரகர் ரமேஷ், வனக்காப்பாளர்கள் நாகேஷ், சான்மோன் உள்பட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு உரிய நிவாரண தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்