திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்தி சிலை திடீரென மாயமானதால் பரபரப்பு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்தி சிலை திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிலையை சன்னதிக்குள் பத்திரமாக வைத்திருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Update: 2018-10-25 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் பழமை வாய்ந்த சிவன் தலமாகும். சர்வ தோஷ பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இக்கோவிலின் கல்தேர் விட்டவாசல் பகுதியில் இருந்த விநாயகர் சிலை கடந்த 2001-ம் ஆண்டு திருட்டு போனது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மேற்கு கோபுர வாசல் கமலாலய குளக்கரையில் இருந்த விநாயகர் சிலையும் திருட்டு போனது. இந்த வினாயகரை, ‘இங்க்’ விநாயகர் என்று அழைத்து வந்தனர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகள் இந்த விநாயகர் மீது பேனா மையை(இங்க்) தெளித்து வழிபட்டதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள பார்வதீஸ்வரர் சன்னதியின் எதிரே உள்ள கல் மண்ட பத்தில் இருந்த நந்தி சிலையும், அதன் பலி பீடமும் திடீரென மாயமாகி இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே பார்வதீஸ்வரர் சன்னதிக்குள் அவை இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

பார்வதீஸ்வரர் சன்னதி எதிரே இருந்த நந்தியும், பலிபீடமும் எளிதில் நகர்த்த கூடிய நிலையில் இருந்தன. இதனால் பாதுகாப்பு கருதி அவற்றை பார்வதீஸ்வரர் சன்னதிக்குள் பத்திரமாக வைத்துள்ளோம். நந்தி, பலி பீடம் எங்கும் மாயமாகவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சிலை கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா, திருவாரூர் தியாகராஜர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப் பணிகளை செய்தபோது, கோவிலில் உள்ள கல்தூண்கள் காணாமல் போனதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்துவோம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறி உள்ளார்.

இந்த நிலையில் நந்தி மற்றும் பீடம் திடீரென மாயமானது திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவை, சன்னதிக்குள் பத்திரமாக இருப்பது தெரியவந்த பின்னரே பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்