சாத்தான்குளத்தில் சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய பில் கலெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
சாத்தான்குளத்தில் சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய முன்னாள் பில் கலெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் மகாலிங்கம்(வயது 46). இவர் கிருஷ்ணன்கோவில் தெருவில் தனது அப்பா பெயரில் உள்ள வீட்டுக்கு 2005-06-ம் ஆண்டுக்கு உரிய சொத்து வரி செலுத்திய ரசீது பெறுவதற்காக சாத்தான்குளம் பேரூராட்சிக்கு சென்றார். அப்போது, அங்கு பில் கலெக்டராக திருமலை மகன் திருவேங்கடநாராயணன்(63) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் சொத்து வரி ரசீது கொடுப்பதற்கு ரூ.1,200 லஞ்சம் கேட்டு உள்ளார்.
இது குறித்து மகாலிங்கம் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 23-12-2005 அன்று லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக திருவேங்கடநாராயணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றம் சாட்டப்பட்ட திருவேங்கடநாராயணனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.