டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை பரமன்குறிச்சி கஸ்பா பிச்சிவிளை ரோட்டில் திறக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தி.மு.க. கிளை செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் குணசீலன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் கோவிந்தராசுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தில்லைப்பாண்டியிடமும் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.